#Apple நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 40 ஆயிரம் கோடி டாலர்?
ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வன்பொருள் மற்றும் சேவைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி டாலர் என்ற உச்சத்தை இந்த ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவுன்டர் பாயின்ட் (counter point) என்ற ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்பச் சந்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் குறித்த ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் இந்த ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவன வருவாய் ரூ.40 ஆயிரம் கோடி டாலரை எட்டும் எனத் தெரிவித்துள்ளது. 2023-ல் ஆப்பிள் நிறுவனம் சரிவைச் சந்தித்த நிலையில், வன்பொருள் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் 3% அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டதாக கவுன்டர் பாயின்ட் குறிப்பிட்டிருந்தது. அதன்படி வன்பொருள் மற்றும் மின்னணு பிரிவில் ஐ-போன், ஐ-பேட், மேக், கடிகாரம், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட மின்னணு பொருள்களின் மேம்படுத்தப்பட்ட அறிமுகம் வளர்ச்சிக்கு வித்திட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ், இந்த ஆண்டின் அதிக வளர்ச்சி கொண்ட தயாரிப்பாக உள்ளது.
இது குறித்து பேசிய கவுன்டர் பாயின்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் தருண் பதாக், வளர்ச்சி விகிதங்களின் அடிப்படையில், ஆப்பிள் செய்யறிவு தொழில்நுட்ப அறிமுகத்துடன் சேவைப் பிரிவு மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. எனினும் வருவாய் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு வன்பொருள்கள் உற்பத்தியே துணை புரிகிறது. 2023 வீழ்ச்சிக்குப் பிறகு, அறிமுகப்படுத்தப்பட்ட வன்பொருள், மின்னணு பொருள்களின் வருகையே இந்த ஆண்டு வருவாய் அதிகரிப்புக்கு காரணம் எனக் குறிப்பிட்டார். மேலும், 2025-ல் சேவைக்கான வருவாய் 100 பில்லியன் டாலர் என்ற இமாலய இலக்கை எட்டும் எனவும் கவுன்டர் பாயின்ட் கணித்துள்ளது.