எலெக்ட்ரிக் கார் திட்டத்தை கைவிட்டதா ஆப்பிள்? வெளியான புதிய தகவல்!
நீண்ட கால கனவுத் திட்டமான ஆப்பிள் எலெக்ட்ரிக் கார் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் என்றால் அது ஆப்பிள் ஐபோன் தான். உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட ஆப்பிள் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால கனவுத் திட்டமான ஆப்பிள் எலெக்ட்ரிக் கார் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தங்கள் முழு முயற்சியை போடுவதற்கு பதிலாக, ஏஐ அம்சத்தில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் கார் கனவு திட்டத்தை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக முயற்சித்து வந்தது. ஆனால் இத்திட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் இதைக் கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக ஆப்பிள் காரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், சந்தையில் தற்போது ஆப்பிள் சாதனங்கள் ஈட்டி வரும் லாபத்தை புதிய கார் ஈட்டுமா என்பதும், காரை வெளியிடுவதற்கு மட்டுமே இன்னமும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஒருவேளை ஆப்பிள் கார் வெளியாகும் பட்சத்தில் அதன் விலை நிச்சயம் 1 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் வரையிலான விலையை கொண்டிருக்கும்.
இதற்கு அடுத்தபடியாக, தற்போது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் AI சேவைகளில் களமிறங்கவுள்ளது. இன்றைய காலத்தில் தானாக இயங்கும் காரை உருவாக்குவது கடினமாக இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் திட்டத்தை கைவிட்டு, AI பக்கமாக செல்லத் தயாராகியுள்ளது. இதன் மூலமாக ஆப்பிள் இப்போதைக்கு எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழையப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ப்ராஜெக்ட் டைட்டனில் ஈடுபட்டு வந்த 2000 பேரும் ஏஐயில் மாற்றப்படாலம் என கூறப்படுகிறது.