“தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து அனுர திசநாயகே பரிசீலிக்க வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் அனுர குமார திசநாயகே பரிசீலிக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, 3 நாள் அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்தியா, இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும் மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
இலங்கை அதிபர் அனுர திசநாயகே, தமிழக மீனவர்களின் கவலைகளை மனிதாபிமானமாகவும், அமைதியான முறையிலும் தீர்க்கும் வகையில், நமது பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது ஊக்கமளிக்கிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் அனுர குமார திசநாயகே பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இத்தகைய சைகை, இந்த விவாதங்களில் நம்பிக்கையை ஊட்டுவதுடன், நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகள் மற்றும் இணக்கமான எதிர்காலத்தை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வமான படியைக் குறிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.