சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnu மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக, பள்ளி நிர்வாகம் மகாவிஷ்ணு என்பவரை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். ஆனால் அவர் மாணவர்களிடையே மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் ஆன்மிக ரீதியாக பேசினார். போன ஜென்மத்தில் செய்த பாவம்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுதிறனாளிகளாக சிலர் பிறந்துள்ளனர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதனால் அப்பள்ளியின் மாற்றத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை அங்கிருந்தே சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
விசாரணையில், “எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை நல் வழிப்படுத்தும் நோக்கிலேயே பேசினேன். இதுபோன்று பல இடங்களில் நான் பேசி இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் சரவணன் கொடுத்த புகாரில் திருவொற்றியூர் போலீசார் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.