பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது! ஒரே மாதத்ததில் 15-வது சம்பவம்!
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த 16-ம் தேதி மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. பீகாரில் பாலங்கள் தொடர்ந்து விழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம் இதுவாகும்.
அராரியா மாவட்டத்தில் அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றை கடப்பதற்காக பொதுப் பணித் துறையால் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கடந்த 16ம் தேதி மாலை அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் ஏற்கெனவே 2017-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள் : கூடலூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்குள் பிகார் மாநிலத்தில் 15 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், ஏற்கெனவே நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 பொறியாளர்களை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றது.