கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்?
அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இவர் கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இவர், மார்ச் 2019-ல் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யானார்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்காவின் மகனுமான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்ற உள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரத்தில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைக்கிறேன். உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் எனது முயற்சிகளை நான் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, எனது நேரடி தேர்தல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.
கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டிற்கும், ஹசாரிபாக் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட பல வாய்ப்புகளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பாஜக தலைமை அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.