#Hamas தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு!
ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி ஓராண்டு கடந்து இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறது.
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரம் மேலாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
இதனிடையே கடந்த ஜூலை மாதத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானுக்கு சென்றிருந்த போது இஸ்ரேல் தாக்கியதில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். தொடர்ந்து, கடந்த செப். 21-ம் தேதி யாஹ்யா சின்வாரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது. இராணுவ உளவுத்துறையைப் பின் தொடர்ந்து, சின்வார் இறந்ததற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.