2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!
ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் ஆண்டு தோறும் ’நோபல் பரிசு’ வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அறிவியல் சமூகத்தால் இது உலகின் மிகவும் உயிரிய விருதாக கருதப்படுகிறது. மேலும் இந்த விருதானது இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர் ஜோயல் மோய்கிர், பிரான்ஸ் பொருளாதார நிபுணர் பிலிப் அகியோன், கனடா பொருளாதார நிபுணர் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்கள் மூவருக்கும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.