அண்ணா உயிரியல் பூங்காவின் ‘வீரா’ உயிரிழந்தது!
வண்டலுார் உயிரியல் பூங்காவில், இடுப்பு திசுக்கள் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட வீரா, கடந்த ஒரு மாதமாக எழ முடியாமல் தவித்து வந்த நிலையில், நேற்று உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினரான வீரா என்ற சிங்கம் இறந்துவிட்டதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். உயிரியல் பூங்காவில் ஜூன் 30, 2011 அன்று ராகவ் மற்றும் கவிதா என்ற சிங்கங்களுக்கு பிறந்த ஆண் சிங்கமானது, சிறு வயதிலிருந்தே இடுப்பு திசுக்கள் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதமாக எழ முடியாமல் தீவிர மருத்துவ பராமரிப்பில் இருந்தது.
இறந்துபோன வீரா சிங்கம் உயிரியல் பூங்காவின் வன உயிரின மருத்துவக் குழுவால் தொடர் கண்காணிப்பில் இருந்தது. உயிரியல் பூங்கா வனஉயிரின மருத்துவக் குழுவால் வழங்கப்பட்ட அர்ப்பணிப்புள்ள கவனிப்போடு கூடுதலாக, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS) நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. இருப்பினும், சிகிச்சை வீராவுக்கு பலனளிக்வில்லை.
பூங்கா வன உயிரின மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், வீரா நேற்று மதியம் இறந்துவிட்டது” என தெரிவித்துள்ளனர்.