அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் கடந்த திங்கள்கிழமையன்று(டிச.23) கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை நடத்துகிறது.
அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்களிடம் நேற்று 7 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு, அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மகளிர் ஆணையக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள மம்தா குமாரி, பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.