அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளுக்குப் புத்துயிர் அளிப்போம் - ஆதவ் அர்ஜூனா!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் கொள்கை பரப்பு செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆற்றிய உரை, அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. தனது உரையின் தொடக்கத்தில், "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்ற வள்ளுவர் குறளை மேற்கோள்காட்டி, மாநாட்டின் வெற்றிக்குக் காரணம் தளபதியின் முயற்சிதான் என்று குறிப்பிட்டார்.
விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கை தலைவர்களாகப் பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை அறிவித்த நிலையில், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை மட்டும் ஏன் முகப்புப் பக்கத்தில் வைத்தார் என்ற கேள்விக்கு ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்தார்.
"1967-ல் திராவிடத்தை உருவாக்கியவர் அண்ணா. ஆனால், 1971-ல் அண்ணா உருவாக்கிய கட்சியை ஒரு குடும்பத்திற்கான கட்சியாக மாற்றிய கலைஞர் கருணாநிதிக்கு எதிராகப் புரட்சித் தலைவர் 1977-ல் புதிய கட்சியை உருவாக்கினார்" என்று அவர் பேசினார்.
மேலும், இன்றைய அரசியல் சூழலை விமர்சித்து, "இன்று 10 குடும்பங்களை ஒழித்துவிட்டு, தனது இரு குடும்பங்களுக்காகச் சமூக நீதியை மறந்து, ஊழலையும் சாதிய அரசியலையும் உருவாக்கியுள்ளனர்" என்று கடுமையாகச் சாடினார்.
இந்த மாநாட்டை நடத்த அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்திய போதும், தொண்டர்களின் ஆதரவால் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா கொள்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், கொள்கைகளை மறந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அண்ணா மற்றும் புரட்சித் தலைவரின் உண்மையான கொள்கைகளை நிறைவேற்றும் வலிமை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தனது உரையின் இறுதியில், "மக்களுக்கான ஒரு அரசை மதுரை மண்ணில் பாண்டிய மன்னர்கள் உருவாக்கினார்களோ, அதேபோல நாங்களும் அழைக்கிறோம்" என்று கூறி உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து, மாநாட்டுப் பாடல் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ஜல்லிக்கட்டு காளை சிலையை விஜய்க்குப் பரிசாக வழங்கினர்.