அண்ணா, கருணாநிதி நினைவிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் புனரமைக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 26) திறந்து வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018-ம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டு கால திமுக தலைவர், தனது 14 வயதில் இந்தி திணிப்பு எதிர்த்து போராடியவர். நினைவிடத்தில் ‘ஓய்வெடுக்கமால் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவிட பகுதியில் கலை, இலக்கியம், அரசியலில் முத்திரை பதித்ததின் அடையாளமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிட திறப்பு விழாவிற்கு தோழமைக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள், அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அழைப்பு விடுத்து இருந்தார். தொண்டர்கள், பொது மக்கள் நினைவிட திறப்பு விழாவை பார்ப்பதற்காக அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் அவர்களுக்கென்று எல்இடி திரை அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.