'ஏஞ்சல்' வழக்கு - துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் நாட்டின் துணை முதலமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலுக்கு வருவதற்க்கு முன் சினிமாவில் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தமிழ் சினிமாவில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் கெத்து, மனிதன், மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே 'ஏஞ்சல்' என்ற படத்தில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார். இப்படத்தை ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் தயாரித்தார். கடந்த 2018 ஆண்டு ஏஞ்சல் படப்பிடிப்பு தொடங்கி, 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.
இப்படப்பிடிப்பு 20 சதவீதம் நிலுவையில் இருக்கும் போது, மாமன்னன் தான் எனக்கு கடைசி படம் என்றும், நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து விட்டார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு சென்று விட்டார். இதனால் ஏஞ்சல் படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காத்தால் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.