ஆந்திரா | தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஆறு பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசம் அனகப்பள்ளி மாவட்டத்தில் கைலாசப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் தொழிற்சாலையில் சுமார் 15 பேர் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் மொத்த பட்டாசு ஆலையும் இடிந்து விழுந்தது.
தற்போதைய நிலைமை குறித்து அங்குள்ள உள்ளூர் வாசிகள், இதுவரை ஆறு உடல்கள் முற்றிலும் அடையாளம் காண முடியாத வகையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்ததாக கூறினர். விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து, இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பல உடல்கள் இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிபுணர் குழுக்கள் மற்றும் உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என தகவல்.