திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா - புதிய அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து!
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா பாராட்டினார். மேலும் புதிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு 2019ம் ஆண்டு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார்.
புதிய முனையம் திறக்கப்பட்டாலும் அதிநவீன தொழில் நுட்ப மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ஜூன் 11ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
“ திருச்சிராப்பள்ளியின் புதிய விமான நிலைய முனையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய முனையம் மிகவும் அழகாக இருக்கிறது. குறிப்பாக உள்ளூர் கலாச்சாரம் மற்றும் வடிவமைப்பு கூறுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். புதிதாக விமான போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ளா ராம் மோகன் நாயுடு நாடு முழுவதும் புதிய, நவீன விமான நிலையங்களை உருவாக்குவதில் புதிய சாதனைகளை படைப்பார் என்று நம்புகிறேன். !" என்று ஆனந்த் மஹிந்திரா எழுதியுள்ளார்.