பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!
உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எலெக்ட்ரிக் காரை பரிசாக அளித்துள்ளார்.
அஜர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியர், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, பிரக்ஞானந்தாவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, "தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி - ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 (XUV400) என்ற மின் வாகனத்தை பரிசாக அளிக்கவுள்ளேன்." என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் காரின் சாவி பிரக்ஞானந்தாவின் பெற்றோரிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.