Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரயில் விபத்தைத் தடுத்த வயதான தம்பதி! - ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

03:03 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

தென்காசியை அடுத்த புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

Advertisement

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை வட்டம்,  புளியரை கிராமம்,  'எஸ்' - வளைவு என்ற தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில்,  25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை-கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதி செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து,  தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து,  ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர்,  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர்.  மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

தங்களது முதிர்ந்த வயதையும்,  இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல்,  பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா -  வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.”

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags :
AccidentTenkasiTrain
Advertisement
Next Article