செல்லப்பிராணி ரூ.50கோடி என்கிற இன்ஸ்டா பயனரின் பதிவு வைரல் - ஆய்வுக்கு சென்ற அமலாக்கத்துறைக்கு ஏமாற்றம்!
இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிரபலமாவதற்காக பலரும் பலவித முயற்சிகளை செய்து வருகின்றனர். சிலர் அதன்மூலம் பெரிய அளவில் பொருளீட்டி தொழிலை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து சினிமாவிலும் சொல்லுமளவுக்கு சாதித்தவர்களும் உண்டு
அந்த வரிசையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு சமூக வலைதள பயனர் ஒருவர் ரூ.50 கோடி மதிப்புள்ள செல்லப்பிராணியை (நாயை) வெளிநாட்டில் இருந்து வாங்கியிருப்பதாகவும், அது ஓநாய்க்கும், காக்கேஷியன் ஷெப்பர்ட் நாய்க்கும் பிறந்தது என்று கூறி படத்தை பதிவிட்டார்.
மேலும் அப்பதிவில் உலகிலேயே மிகவும் விலைமதிப்புள்ள செல்லப்பிராணிக்கு சொந்தக்காரர் என்றும் தன்னைக் கூறிக் கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த 'ரூ.50 கோடி நாய்' என்கிற பதிவு சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. இதன் மூலம் அவர் எதிர்பார்த்த பிரபலமும் கிடைத்தது.
இந்த நிலையில் 'ரூ.50 கோடி நாய்' பதிவைக் கேள்விப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு இதில் அந்நியச் செலாவணி விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, 'ரூ.50 கோடி நாய்' உரிமையாளர் வீட்டுக்கு அதிரடியாக ஆய்வுக்குச் சென்றனர். திடீரென தனது வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்ததையடுத்து அந்த நபர் திகைப்படைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நாய் அவருக்கு சொந்தமானது இல்லை என்றும், பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வந்த நாயைப் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பிரபலமாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கும் அளவுக்கு வசதியானவர் இல்லை என்பதும் புகைப்படத்தில் இருந்த நாயின் மதிப்பும் ரூ.1 லட்சம் கூட இல்லை என்றும் தெரியவந்தது. சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான செல்லப்பிராணியை (நாயை) வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்திருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, அமலாக்கத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.