"வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனையடுத்து, கடந்த 5ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 58 கட்சிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில், இக்கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்கள், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம், அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைவோம். தொகுதி மறுசீரமைப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.