சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி - சிவகார்த்திகேயனின் 'அமரன்’ டைட்டிலுக்கு இயக்குநர் விளக்கம்!
நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு ‘அமரன்’ என அறிவிக்கப்பட்ட நிலையில் சலசலப்பு எழுந்தது. அதற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK21 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ‘அமரன்’ டைட்டிலை ஒட்டி சலசலப்பு எழுந்துள்ளது. 1992-ம் ஆண்டு இயக்குநர் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம்தான் ’அமரன்’. இந்தத் தலைப்பை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்துள்ளதால் எழுந்த சலசலப்புக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
‘இந்த படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போதே ‘அமரன்’ என்ற வார்த்தையை எழுதி விட்டுத்தான் படத்தின் திரைக்கதையை ஆரம்பித்தேன். ‘அமரன்’ என்றால் அழிவில்லாதவன் என அர்த்தம், போர் வீரர்களை அமரர்கள் என அழைப்பார்கள். அதனால், இந்தக் கதைக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும். இந்த டைட்டிலை எங்களுக்கு கொடுத்த இயக்குநர் கே. ராஜேஸ்வருக்கு நன்றி. நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ எனச் சொல்லி உரிய அனுமதியோடுதான் இந்த டைட்டிலை பயன்படுத்தி இருக்கிறேன் என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.