“அம்மா அமைப்பு மீண்டும் அமைக்கப்பட வேண்டும்” - #Actor மன்சூர் அலிகான் அறிவுறுத்தல்!
கேரளாவில் அம்மா அமைப்பு மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“பாலியல் குற்றங்கள் உலகம் முழுவதும் நடக்கிறது. சினிமாவில் எங்களுடன் நடிப்பவர்கள் எல்லோரும் எங்கள் குடும்பம் போன்றவர்கள். பெண்களுக்கு ஒரு அவமானம் என்றால் அதற்கு முழு காரணமும் படத்தில் நடிப்பவர்கள் தான். எந்த துறையிலும், ஒரு தப்பு நடக்கும்போது அது உடனே சரி செய்ய வேண்டும். சினிமாவை முடித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஏழை நடிகர்களுக்கு இதுவரைக்கும் நடிகர் சங்கம் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அம்மா சங்கம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும். கேரளாவில் மோகன்லால் மீண்டும் பணிக்கு வர வேண்டும். நடிகைகளுக்கு ஒரு அமைப்பு இருக்கும் வரை தான் நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்க முடியும். சினிமாவை கேவலப்படுத்த அவமானப்படுத்த சிலர் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
சினிமாவை என்றும் விட்டுக் கொடுக்க முடியாது. சினிமாதான் மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சினிமாவை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள். நாடு முழுவதும் எத்தனையோ பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதற்கெல்லாம் கமிட்டி அமைத்தார்களா?” என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.