சீக்கிய பிரிவினைவாதிகள் குறி வைக்கப்பட்டதற்கு #AmitShah உத்தரவே காரணம்” - கனடா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலுக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு, நான் தான் கூறியதாக கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரசின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இதைத்தொடா்ந்து நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடாவின் ஆா்சிஎம்பி காவல் படை அண்மையில் குற்றஞ்சாட்டியது.
இதன் மூலம் நிஜ்ஜாா் கொலையில் சஞ்சய் வா்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடா்புபடுத்தியது.இந்த விவகாரம் இரு தரப்பு உறவில் பெரும் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை அடுத்து கனடாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை இந்திய திரும்ப அழைத்துக்கொண்டது. இந்தியாவில் இருந்தும் கனடா நாட்டு தூதர்களை வெளியேற உத்தரவிட்டது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியாவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் அங்கீகாரம் அளித்ததாகவும், அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்ததாகவும் தெரிவித்திருந்தது. அந்த மூத்த அதிகாரி யார் என்ற கேள்விக்கு பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா என அந்த பத்திரிகை கூறியது.
இந்நிலையில், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்தது மத்திய அமைச்சர் அமித் ஷாதான் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்தது நான்தான் என கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரசின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பத்திரிகையாளர் என்னை அழைத்து, அந்த நபரா என்று கேட்டார். அந்த நபர் தான் என்பதை நான் உறுதி செய்தேன்” என்று செய்தி நிறுவனத்தினம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அமித் ஷா மீதான தனது குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களையும் அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.