அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். ஆகஸ்ட். 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று (ஆகஸ்ட் - 29ம் தேதி) அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.
சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது அமெரிக்க தொழிலதிபராகவும் உள்ள நெப்போலியன் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் வரவேற்றனர். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம் ஆடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையும் படியுங்கள் : #Formula4 கார் பந்தயம் : சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை இன்று (30.08.2024) 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
2. கோவையில் ₹150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Yield Engineering Systems நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
3. சென்னை, தரமணியில், செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட AI-இயக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க Applied Materials நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
4. மதுரையில் ரூபாய் 50 கோடி முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க Infinx நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
5. சென்னை செம்மஞ்சேரியில் ₹250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
6. சென்னையில் Paypal நிறுவனத்தின் AI மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் முதல் நாளிலேயே ரூ.900 கோடி முதலீடுகள் பெறப்படவுள்ளன. மேலும் 4,100 வேலைவாய்ப்புகள் உருவாக்கபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.