#America - டிரம்பிடம் நலம் விசாரித்த கமலா ஹாரிஸ்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்ட போது, முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த சிறுவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கோல்ஃப் கிளப்பில், டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை குறிவைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ட்ரம்ப் எவ்விதமான காயங்களும் இன்றி உயிர்தப்பினார்.
இதையடுத்து குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோல கொலை முயற்சிகள் தொடர்ந்து வருவது அமெரிக்க தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் டிரம்பை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதில், நாட்டில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என கமலா ஹாரிஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது;
“நேற்று அதிபர் பைடன் என்னை அழைத்தார். நல்ல மனிதர்; நல்ல உரையால். அவர் அழைத்ததை பாராட்டுகிறேன்” என தெரிவித்தார். மேலும், மற்றுமொரு அருமையான அழைப்பையும் இன்று கமலாவிடமிருந்து பெற்றேன். நாங்கள் அதை பாராட்டினோம்” என தெரிவித்தார்.