#America | டொனால்ட் டிரம்ப் வீட்டை பாதுகாக்கும் ரோபோ நாய்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரின் மார் எ லாகோ வீட்டில் ரோபோ நாய் கண்காணிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த நவ. 5-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸை வீழ்த்தி அமெரிக்காவின் 47வது அதிபராகத் தேர்வாகியுள்ளார். 78 வயதான டிரம்ப் “இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும்” என தனது வெற்றி உரையிலும் கர்ஜித்துள்ளார்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்க தேர்தல் களம் சற்று மாறுபட்டது என்றே கூறலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபராகத் தேர்வாகும் நபருக்கு உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கமாகும். அந்நாட்டின் சீக்ரெட் சர்வீஸ் மூலமாகவே இந்த பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. டிரம்பின் மார்-எ-லாகோ வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு பகல் பாராது துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது ரோபோ நாயும் அங்கு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் இல்லத்தின் காம்பவுண்டு சுவர் அருகே சுற்றி வரும் இந்த ரோபோ நாய் அங்கு சந்தேகத்திற்கு இடமான பொருள் எதாவது இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவது கவனிக்கத்தக்கது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மார்-ஏ-லாகோவில் உள்ள டிரம்பின் வீட்டைப் பாதுகாக்க ரோபோ நாய் பயன்படுத்தப்படுவதை அந்நாட்டின் சீக்ரெட் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. அதிபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். டிரம்பின் வீட்டை பாதுகாக்கும் இது ஆஸ்ட்ரோ என்ற ரோபோ நாய் என்று கூறப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ரோபோ நாய் சற்று தனித்துவமாக இயங்கக்கூடியது எனச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது இரண்டு முறை அவர் மீது கொலை முயற்சிகள் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் துப்பாக்கிக் குண்டு அவரது காதை உரசிச் சென்ற நிலையில், அவர் உயிர் தப்பினார். அதைத் தொடர்ந்து, கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஊடுருவினார். இவ்வாறு இரண்டு முறை இவர் மீது கொலை முயற்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.