இஸ்ரேல் - ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 34 பேர் காயமடைந்தனர். மேலும் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம். ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி" என தெரிவித்துள்ளார்.