சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா - 5 ரன்களில் வெற்றி பெற்று அசத்தல்
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது.
அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில், சில கத்துக்குட்டி அணிகள், பெரிய அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கின்றன. குறிப்பாக போட்டியை நடத்தும் அமெரிக்கா அணி இடம்பெற்றுள்ள ’ஏ’ பிரிவில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியில் கனடாவை வீழ்த்தி இருந்த அந்த அணி ,இரண்டாவது போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
டெக்சாஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 44 ரன்களும், சதாப்கான் 40 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. அமெரிக்கா தரப்பில் சிறப்பாக பதிவு செய்ய கென்னிஜ் 3 விக்கெட்டுகளையும், சௌரப் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா அணி களமிறங்கியது.
அந்த அணியின் கேப்டன் மொனாங்க் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து அசத்தினார். இதன் பின்னர் கௌஸ் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் தலா 35, 36 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். அந்த அணி 20 முட்வில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவர் நோக்கி சென்றது. இது இந்த தொடரில் நடைபெறும் இரண்டாவது சூப்பர் ஓவராகும்.
இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழந்து 13 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் அமெரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது ’ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் அமெரிக்க அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த தொடரில் துவக்க போட்டியிலேயே பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.