பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - கணவன், மனைவி உயிரிழப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மனைவி கல்யாணி மற்றும் அவரது மகள் பபிதா ஆகிய மூன்று பெரும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்த முருகனின் மனைவி கல்யாணி, மகள் பபிதா, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய நான்கு பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முருகனின் மனைவி உயிரிழந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உதவியாளர் மற்றும் பபிதா ஆகிய மூவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.