ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகிய அம்பத்தி ராயுடு..!
ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஒரே வாரத்தில் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் நட்சத்திர வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு அண்மையில் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு அரசியலில் ஈடுபடுவது குறித்து சில காலங்களாக கூறிவந்தார். அதுபோலவே, ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் இணைந்தார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கும் நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கட்சியில் இணைந்த பத்து நாட்களிலேயே அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
"ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவு. அடுத்த நடவடிக்கைகள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என்று அதில் தெரிவித்துள்ளார். அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.