அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உட்பட 15 காவல் துறையை சார்ந்தவர்களுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களான
அம்பாசமுத்திரம், விகேபுரம், மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மற்றும் துணை காவல்துறையினர் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார ஆட்சியர் சபீர்
ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான காவல்துறை வெவ்வேறு புகார்களின் அடிப்படையில் நான்கு வழக்குகளை பதிவு செய்தனர். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேர் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். தொடர் விசாரணையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தலா 250 பக்கங்களுக்கு மேலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை இன்று (டிச.15) துவங்கியது.
பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன், பல்வீர்சிங் மற்றும் இதற்கு துணையாக இருந்த காவல்துறையினரையும் கைது செய்ய வேண்டும் என்றார். மேலும் அவர்களை பிணையில் விடக்கூடாது எனவும் பற்களை பிடுங்க பயன்படுத்திய கட்டிங் பிளேயர், கற்கள், ரத்தக்கரை படிந்த துணிகள் என எதையும் சிபிசிஐடி காவல்துறை கைப்பற்றவில்லை எனவும் வாதிட்டார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையானது நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது . இதனிடைய பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு அளித்தனர். மாலை 5:45 மணிக்கு 15 நபர்களையும், தலா இரண்டு நபர்கள்
உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் மகாராஜன், ஜாமின் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனை எதிர்த்து ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிப்போம். இந்த வழக்கு விசாரணை முறையாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று இருக்க வேண்டும்.
அங்கு நடைபெற வலியுறுத்துவோம். அங்கும் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாவிட்டால் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பல்வீர் சிங் தரப்பு வழக்கறிஞர் துரைராஜ் வழக்கு பற்றி கூறும்போது இந்த வழக்கு பொய் வழக்கு என்பதை நிரூபிப்போம் என்று தெரிவித்தார்.