விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!
விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களான
அம்பாசமுத்திரம், விகேபுரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் அங்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், பல்வீர்சிங் உள்பட 15 பேர் மீது புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் ; அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல்!
அதனைத்தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும், ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.மேலும், சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. பல்வீர் சிங் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த மாதம் 15-ந்தேதி இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்துசெய்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 10 மாதத்திற்கும் மேல் பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.