கும்பக்கரை அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி!
கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை முடிவடைந்துள்ள நிலையில் நாளை முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதியை அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு
தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கும்பக்கரை அருவிக்கு ஆண்டில் பெரும்பாலான நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து இருப்பதால், தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், அருவி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். அடுத்தடுத்து கனமழை பெய்ததால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதையும் படியுங்கள் : ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!
இந்நிலையில், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நாளை (மே 27) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதியளித்து பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளனர்.