மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தமாக 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேட்புமனுக்கள் மீது கடந்த மார்ச் 28-ம் தேதி பரிசீலனை நடைபெற்றது. இதில் போதிய ஆவணங்களை இணைக்காத 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 1,085 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதனிடையே, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவிற்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக விரும்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட்டால் மட்டுமே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே மதிமுக சார்பில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இதனால் பம்பரம் சின்னம் கிடைப்பதில் மதிமுகவிற்கு தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு, தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.