அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நாளை (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழநாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் அதிமுக, தேமுதிக கட்சிகள் பங்கேற்பதாகவும், நாம் தமிழா், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாகவும் அறிவித்தன. இதற்கிடையே, நாகையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மீண்டும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இக்கூட்டம் நடைபெறும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கைகள் எங்கே போடப்பட்டுள்ளது, அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.