“மது ஒழிப்பு மாநாடு...கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும்.... ” - விசிக தலைவர் #Thirumavalavan பரபரப்பு பேட்டி!
மது ஒழிப்பு மாநாட்டால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கூட அதை நாம் ஏற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ந்தேதி நடத்துகிறார்.
இந்த மாநாடு தி.மு.க கூட்டணிக்கு அரசியல்ரீதியாகவும், ஆட்சிரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில், சீட் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக திருமாவளவன் நடத்தும் அரசியல் என்றும், அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான அரசியல் என்றும் இருவேறு விமர்சனங்கள் பொதுத் தளத்தில் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, “கொள்கை வேறு; கூட்டணி வேறு. பேர அரசியல் எங்களுக்குத் தெரியாது. தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் சிறுத்தைகளுக்கு கிடையாது” என்றெல்லாம் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அரசியலில் அதிகாரம்; ஆட்சியில் பங்கு என்கிற திருமாவளவனின் முழக்கம் வேறு (பழையது என்றாலும் இப்போது ட்ரண்ட் ஆகிறது) கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பு அறிவாலயத்தில் நடக்கிறது. இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக உழைப்பாளர் கட்சியை உருவாக்கி 50 ஆண்டுகளுக்கு முன்பே 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் ஒரு அரசியல் சக்தியாக நடமாடியவர் ராமசாமி படையாட்சியார். 1952 இல் வன்னியர் சமூகத்தை சார்ந்த மக்களும் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை முன்னெடுத்து சென்றவர்.
மது ஒழிப்பு மாநாட்டினுடைய முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும். இரண்டாவது தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்த குரல் எழுப்ப வேண்டும். தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை திமுகவும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சரை சந்திக்க உள்ளேன்.
அரசியலுக்காக நாங்கள் மாநாடு நடத்தவில்லை. மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்ற தாய்மார்களின் கோரிக்கைகளுக்காக நடைபெற இருக்கிறது. இதற்காக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கூட அதை நாம் ஏற்க வேண்டும். நோக்கம் உறுதியாக இருக்க வேண்டும். பாமக உடன் சேர்ந்து செயல்பட முடியாமல் இருப்பதற்கு அவர்கள் தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான திருமாவளவனின் முழுப் பேட்டியைக் காண...