Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

08:51 PM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ந் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிகளிலும், புதுச்சோி ஜிப்மா் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.

இதையடுத்து தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அந்த சட்ட திருத்த மசோதாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ,10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம், 2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்படடது. இந்த சூழலில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை விதிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா அமல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச்செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள். அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் 29-6-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்டமசோதா 2024 நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அச்சட்டமசோதாவிற்கு கவர்னரால் 11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CM MK StalinCMO TamilNaduillicitLiquorliquornews7 tamilNews7 Tamil UpdatesSpurious liquortamilnadu assemblyTN AssemblyTN liquor law
Advertisement
Next Article