விஷச்சாராய விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜூன் 21) சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
பேரவையின் கேள்வி நேரத்திற்குப் பிறகு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, விசிக சார்பில் சிந்தனை செல்வன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர். இதனயைடுத்து கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
“அரசுக்கு பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு என்னுடைய நன்றி. அரசு நிச்சயமாக அதை கவனத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், ஏனோ அதனைச் செய்யாமல் இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்னையிலும் அரசியல் காரணங்களுக்காகத் தன் கட்சியினருடன் வெளியே சென்றுவிட்டார்.
நேற்று 47 நபர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்திய காரணத்தினால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 நபர்கள் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 67 நபர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 32 நபர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 நபர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 16 நபர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாமோதரன், மதன், விஜயா (க/பெ. கோவிந்தராஜ்) ஆகிய 3 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 20-ம் தேதி காலையில் ஆய்வுக் கூட்டத்தை உயர் அதிகாரிகளோடு நடத்தினேன். அதனையடுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தேன். அவர்களும் கள்ளக்குறிச்சிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அரசு அறிவித்த தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நம் அனைவருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்துள்ள இந்தத் துயர சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர், திருக்கோவிலூர் சட்டம்-ஒழுங்குக் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர் நடவடிக்கை குறித்து இங்கு அனைவரும் பேசினீர்கள். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதேபோன்ற சம்பவம் தொடர்பான வழக்கினை இந்த அரசு சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரண்டு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில், விழுப்புரம் வழக்கினைப் பொறுத்தவரையில், 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் துறை அலுவலர்கள் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 காவல் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மதுபானங்கள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாவண்ணம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4 லட்சத்து 63 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 16 லட்சத்து 51 ஆயிரத்து 633 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 28 லட்சத்து 79 ஆயிரத்து 605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
- பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.