Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனல் பறக்கும் அலங்காநல்லூர் | தெறிக்கவிடும் காளைகள்...!

12:31 PM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய போட்டியில் 1200 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் அருண் விஜய் வந்துள்ளார்.  அமைச்சர் உதயநிதிக்கு அருகில் மேடையில் அமர்ந்திருந்த அவர்,  ஜல்லிக்கட்டை தான் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை என்றும்,  தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளுடன் இதை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் 10 சுற்றுகள் வரை இருக்கும்.  ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 வீரர்கள் பங்கேற்பார்கள்.  ஒரு சுற்றில் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெறுவர்.

மூன்றாவது சுற்று வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  அவர்களுக்கான முதலுதவி வழங்க ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்திலேயே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன. இதுவரை ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற சுற்றுகளில் எட்டு காளைகளை அடக்கி,  அபிசித்தர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் வி.கே.சசிகலாவின் காளையும் பங்கேற்றது. அந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம்,  நாணயம், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கி வருகிறார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர்.

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Next Article