அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம் !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவர் அஜித். நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி”. இந்தப் படத்தில் ஆரவ், அர்ஜுன், திரிஷா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம்
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதையொட்டி திரையரங்குகளில் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே 900 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் இப்படம் மொத்தமாக 3650 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கிடையே இன்று படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று 'விடாமுயற்சி' படத்தின் 'தனியே' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், 'விடா முயற்சி' திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களுக்கு விடாமுயற்சி படத்தை காண சென்றுள்ளனர்.
அங்கு காலை 6.05 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அந்த வகையில், விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் காட்சியின் முதல் பாதி நிறைவடைந்திருக்கும் வேளையில் நெட்டிசன்கள் பலர் படம் குறித்த கருத்துக்களை அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.