ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக உள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. உயர்த்தப்பட்ட இந்த புதிய கட்டண முறை வரும் ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மக்களவை தேர்தல் முடிந்த கையோடு இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என்ற செய்தி தேர்தலுக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று (ஜூன் 27) ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 28) ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வு குறித்து அறிவித்துள்ளது.
சுமார் 47 கோடி மொபைல் வாடிக்கையாளர்களுடன் இந்திய டெலிகாம் துறையில் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27% வரை உயர்த்தி உள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி குறைந்தபட்சம் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கொண்ட கட்டணம் ரூ.209-லிருந்து ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி 2ஜிபி டேட்டா கொண்ட பேக் ரூ.349 (28 நாட்கள்) மற்றும் அதற்கும் மேலான தொகை கொண்ட பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்படும் என ஜியோ தற்போது அறிவித்துள்ளது.
மொபைல் போன் சேவைகளுக்கான 10வது அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் உயர்த்தியுள்ளன. வரும் நாட்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.