“#Airpurifier நிறுவனங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி!
காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை (ஏர் ப்யூரிஃபயர்) உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்தைய பயிர்க் கழிவுகள் எரிப்பால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காற்றை சுத்தப்படுத்துவது தொடர்பாக ஏர் ப்யூரிஃபயர் நிறுவனங்கள் வெளியிடும் தவறான விளம்பரங்களை நம்பாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
உலக தர நிர்ணய தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது;
காற்று மாசுபாடு குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. மொபைலில் காற்றுத் தரக் குறியீட்டைப் (AQI) பார்த்து, மக்கள் பயந்து போய் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்குகிறார்கள். காற்று சுத்திகரிப்பாளர்கள் இதுபோன்ற பொய்யான கூற்றுக்களை வெளியிடுகிறார்கள்.
அந்த இயந்திரங்களை பார்க்கிறோம். அதற்குள் எதுவும் இல்லை; ஒரு விசிறி மட்டுமே உள்ளது. அதை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல தவறான விளம்பரங்களை, அந்த இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதற்காக நான் BIS ஐக் குறை கூறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பிஐஎஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதை ஒழுங்குபடுத்த இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்), நுகர்வோர் அமைச்சகம் மற்றும் நுகர்வோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தும் முன்னர் அது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அப்போது மசோதாவில் குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட துறை ரீதியாக உலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகள் அடங்கிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்படுகிறது. இது உலகத் தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது.
இந்தியாவில் அளவீடு செய்யப்படும் தர நிர்ணய நடைமுறைகள், சர்வதேச தர நிர்ணய நிறுவனம் (ஐஎஸ்ஓ) மற்றும் சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணைய (ஐஇசி) நடைமுறைகளுடன் 94 சதவீதம் ஒத்துப்போகிறது” என பிரஹலாத் ஜோஷி பேசினார்.