ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட #AIIMSRankHolder! சமூக வலைதள பக்கங்களில் குவியும் விமர்சனங்கள்!
எய்ம்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மருத்துவர் ஒருவர் ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட விவகாரம் சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகியுள்ளது.
வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும், இன்னும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி தான் காணப்படுகிறது. அதிலும், மெத்த படித்த, வெளித்தோற்றத்தில் முற்போக்கான மக்கள் கூட வரதட்சணை வாங்குவதை இன்னும் பின்பற்றும் சூழலே நிலவுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆந்திராவில் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் மாற்று மயக்க மருந்து நிபுணரை திருமணம் செய்து கொள்ள AIIMS-ல் உள்ள ஒரு உயர்மட்ட சிறுநீரக மருத்துவர் ஒருவர் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டது அம்பலமாகியுள்ளது. எய்ம்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஒரு மருத்துவர் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டதை மற்றொரு மருத்துவர் ஒருவரே சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தனது சக தோழிக்கு இப்படி ஒரு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரதட்சணையை கொடுக்க அந்த பெண் மருத்துவரின் பெற்றோர் தங்களது ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையும் கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அவர்களுக்கு மற்றொரு பெண்ணும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகியுள்ளது. பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சொந்த காலில் நிற்க தைரியம் இல்லாமல் இப்படி, வரதட்சணையை நம்பி சிலர் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்து வருகின்றனர்.