"மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம்"- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
அதிமுக ஆட்சியில், உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும், அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக செய்து வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“மின்கட்டண உயர்வு தொடர்பாக, அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் அவர்களது நடவடிக்கை இருக்கிறது. மின்கட்டண உயர்வுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் என அப்போதைய மத்திய அரசு சொன்னபோது, அப்போதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். திமுகவும் எதிர்த்தது.
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில், அன்றைய முதலமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் உதய்மின் திட்டத்தில் இணைத்தார். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய மின்துறை அமைச்சர் கையெழுத்து போட்டு இந்த திட்டத்தில் இணைத்து கொண்டார். இது, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முக்கிய சரத்து என்னவென்றால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அன்றைய அதிமுக அரசு அளித்தது.
2011-ம் ஆண்டு முதல் 2012 வரை, திமுக ஆட்சியில் இருந்தபோது, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஒட்டு மொத்த நிதி இழப்பு ரூ.18 ஆயிரத்து 954 கோடியாக இருந்தது. பின்னர் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த செலவு, ரூ.94 ஆயிரத்து 312 கோடியாக அதிகரித்ததுடன், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு வரை, ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடியாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு அதிகரித்தது. இதற்கு அதிமுக அரசுதான் காரணம்.
இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். வட்டியை பொறுத்தவரை, 2011 திமுக ஆட்சியில் இருக்கும் வரை, ரூ.4,588 கோடியாக இருந்தது. பின்பு 259% ஆக அதிமுக ஆட்சியில் கூடியது. அதன்படி வட்டி மட்டும் 2021-ல் ரூ.16,511 கோடியாக வந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை மோசமாக வைத்து விட்டு சென்றார்கள். இந்த இழப்புகளை சரி கட்டதான் தற்போதைய மின் கட்டண உயர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நிதிநிலைகளின் படி,கடந்த ஆண்டு ஜூலை 1 அன்று, நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் படி, அனைத்து மின் இணைப்புக்கு உயர்த்த வேண்டிய 4.7% கட்டண உயர்வுக்கு பதிலாக அன்றைய கட்டண உயர்வாக 2.18% மட்டுமே உயர்த்தப்பட்டது. இதில் கூட, வீடுகளுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்றது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
எனவே, அதிமுக ஆட்சியில் இருந்த போது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் இதற்கு காரணம். அதிமுக பற்ற வைத்த நெருப்புதான் இன்று பரவ காரணம். அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக அரசு செய்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் தேவையாக இருக்கிறது. அதன் கொள்முதல் தொடர்பாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. வந்துள்ள விலைபுள்ளிகளை கொண்டு பரிசிலீத்து வருகிறோம். ஒப்பந்தம் இறுதி செய்த பின்பு, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் முடிந்து, நுகர்வோருக்கு பொறுத்தப்பட்டு பின்பு, இந்த கணக்கீடு முறை அமலுக்கு வரும். கணக்கீட்டில் தவறு நடந்தால் தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலக்கரி இறக்குமதி முறைகேடு அதிமுக ஆட்சியில்தான். ஆகையால் கொள்முதலில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு நிதியை அள்ளி வழங்கி இருக்கிறார்கள். நமது முதல்வரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இந்த பட்ஜெட் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.