“திமுக ஆட்சியின் சட்ட, ஒழுங்கை பற்றிப் பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது” - காவல்துறை மீதான இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
“கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. ஆட்சியில் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றது எங்கள் ஆட்சியில். 100க்கும் மேற்பட்ட மத்திய தேசிய விருதுகளை தமிழ்நாடு எங்கள் ஆட்சியில் பெற்றது.
இந்த ஆட்சியில் காவல்துறை வெவ்வேறு விதமாக செயல்படுகிறது. வேண்டியவர்களுக்கு ஒரு மாறியும், வேண்டாதவருக்கு வேறு மாறியும் காவல்துறை செயல்படுவது வேண்டாத ஒன்று” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்,
“எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகளை சொல்லி வருவதால் சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கேட்டால் அதிமுக ஆட்சி குறித்து கண்ணீருடன் தெரிவிப்பார்கள். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. பேரழிவை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சாட்சி.
சாமானிய மக்களை வதைக்கக்கூடிய ஆட்சிக்கு சாத்தான் குளமே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. தமிழ்நாட்டை புலம்ப வைத்தது தான் அதிமுக ஆட்சியின் சாதனை. ஊழல் செய்து ஊழல் கணக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்தவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
எதிர்க்கட்சி தலைவர் தலைமையிலான ஆட்சியில் நடைபெற்றதை விட திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்து இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் 2024ஆம் ஆண்டில் கொலை சம்பவங்கள் குறைந்து இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கொலைகள் குறைந்து கொண்டு தான் இருக்கிறது.
கொலை குற்ற விகிதம் சராசரி மக்களுக்கு தேசிய விகிதம் 2.2 என்றால் தமிழ்நாட்டில் 1.1 ஆக குறைந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் அதிகமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரவுடிகள் 1929 பேர் என்றால், திமுக ஆட்சியில் 3649 ரவுடிகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறது.
ஏ மற்றும் ஏ ப்ளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. காவல் நிலையம் மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சி ஆட்சித் தலைவர் ஆட்சியில் நடந்த காவல் மரணங்கள் 15. அவற்றில் குறிப்பாக சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. திமுக ஆட்சியில் ஒரு காவல் நிலைய மரணம் கூட இல்லை.
14174 பேர் அதிமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 15899 பேர் திமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கையும் பொது அமைதியும் சிறப்பாக வைத்திருக்கிற இந்த ஆட்சியை பார்த்து குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. நீதியை பெற்றுத்தர வழக்கு பதிந்தால் மட்டும் போதாது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது அவசியம்.
கொலை ஆதாய கொலைவழக்கில் 95.2 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கொள்ளை வழக்குகளில் 98.4 விழுக்காடு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கை பற்றி பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்” என்றார்.