எலான் மஸ்க் வெளியிட்ட AI வீடியோ - மோடி, பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ!
உலகத் தலைவர்கள் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றது போல, செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட காணொலியை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரையும் போலவே குரல் மாதிரி, வீடியோ மாதிரி என பல புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில், எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஏஐ பேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவில், கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஜூகர்பெர்க், நெற்றியில் திலகமிட்டு, வண்ணமயமான ஆடை அணிந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக துணை அதிபர் கமலா ஹார்ஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ஆப்பிள் சிஇஓ டிம் குக், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் பிரான்சிஸ் என வரிசையாக நடந்து வருகின்றனர்.
கடைசியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ மற்றும் இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு நேரடி ஆதரவை எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அதிபருமான ஜோ பைடன், உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.