தூய்மையான குடிநீரை உருவாக்க AI - #Korea விஞ்ஞானிகள் அசத்தல்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.
தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இதனால், இந்த தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட சீனாவில் ஹோட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் செய்யும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாங்காய் நகரில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் உணவை ஆர்டர் செய்கிறார். சிறிது நேரத்தில் அவரின் அறைக்கு ரோபோ உணவை கொண்டு செல்கிறது. பின்னர் அவர் அந்த ரோபோவில் உள்ள ஓப்பன் என்ற பட்டனை அழுத்தியதும் அதன் மேல்பகுதி திறக்கிறது. உள்ளே இருந்த உணவு பார்சலை அவர் பெற்றுக் கொண்டதும், மீண்டும் ரோபோவின் மேல் பகுதி மூடி விடுகிறது.
இதேபோல ஒவ்வொரு துறை ரீதியாகவும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல சாதனைகளை படைத்துவருகின்றனர். அந்த வகையில் கொரியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தமான குடிநீரை தயாரித்து அசத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலகளவில் சுமார் 2.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான மற்றும் சுத்தமாக குடிநீரை பெறுவதில் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
கொரியாவில் டாக்டர். சன் மூன் தலைமையிலான கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (KIST) ஆராய்ச்சியாளர்கள், மின் வேதியியல் நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளனர்.
யோங்னம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பேக் சாங்-சூவின் குழுவுடன் இணைந்து செயல்பட்ட இந்தக்குழு மின் கடத்துத்திறன் அளவீடுகளை நம்பியிருக்கும் சென்சார்களை விட தண்ணீரில் அயனி செறிவுகளை மிகவும் துல்லியமாக கணிக்க ஒரு புதிய செயற்கை தொழில்நுட்ப முறையை கையாண்டுள்ளனர். இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் குளோரைடு போன்ற முக்கிய அயனிகளின் செறிவுகளைக் கணிக்க தோராயமாக 0.9 R² மதிப்பை துல்லியமாக மதிப்பிடுகிறது.
தனிப்பட்ட அயனி செறிவுகளின் துல்லியமான கண்காணிப்பை செயல்படுத்துவதன் மூலம், இந்த தொழில்நுட்பம் சமூக நீர் நலனை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது. இதேபோல உலகளாவிய நீர் சவால்களுக்கு மிகவும் பயனுள்ள பதில்களுக்கு பங்களிக்க முடியும். காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையால் உலகம் போராடி வரும் நிலையில், இது போன்ற கண்டுபிடிப்புகள் பல்வேறு சமூகங்களின் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைக்கு நம்பிக்கை அளிக்கிறது.