'21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக ஏஐ-யை மாற்ற முடியும்' - பிரதமர் நரேந்திர மோடி!
புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிச. 12 ) தொடங்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச கூட்டாண்மை உச்சி மாநாட்டை (ஜிபிஏஐ) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நேற்று (டிச.12) தொடங்கி வைத்தார். அப்போது, நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயற்கை நுண்ணறிவை இந்தியா பயன்படுத்தும் என்று பிரதமர் மோடிஉறுதியளித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜிபிஏஐ உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரை, நேர்மறை மற்றும் எதிர்மறை என இரு பக்கங்கள் உள்ளன. எனவே, அவற்றை பயன்படுத்தும் ஒவ்வொரு நாட்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.
ஏஐ தொழில் நுட்பத்தை 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக மாற்ற முடியும். ஆனால், அதே நேரம் 21-ம் நூற்றாண்டை அழிக்கும் சக்திகளில் ஒன்றாகவும் ஏஐ தொழில்நுட்பம் இருக்கும்.
டீப்பேக் , சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு திருட்டு போன்ற பயன்பாடுகளை தவிர, ஏஐ தொழில்நுட்பமானது பயங்கரவாதிகளின் கைகளில் சென்று கிடைத்து விடக்கூடாது. ஏஐ பயங்கரவாதிகளின் கைகளில் சென்றடைந்தால், அது உலக நாடுகளின் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகளவிலான பிரச்னைகளுக்கு தீர்வுகளாக ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை நாம் வைத்திருப்பது போல், ஏஐ பயன்பாட்டிற்கான உலகளாவிய நெறிமுறை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றங்களை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அரசு விரைவில் ஏஐ சார்ந்த தொழில்நுட்ப பணிகளை தொடங்கும். அதேநேரம், நெறிமுறைகளுக்கு உட்பட்டே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் எனக் கூறினார்