மனிதர்களுக்குப் புரியாத மொழியில் பேசத் தொடங்கும் AI Botகள் - Gibberlink Mode என்றால் என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், AI Chatbots ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்போது, அவை Chatbots என்பதை அறிந்துகொண்டு, மனிதர்களுக்குப் புரியாத ஒரு மொழிக்கு தன்னைத் தானே மாற்றிக்கொண்டு உரையாடத் தொடங்குகின்றன. இணையத்தில் பரவி வரும் இந்த பதற வைக்கும் வீடியோ, செயற்கை நுண்ணறிவு மனிதனை மீறி விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்ற அச்சத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளதாக பலர் பகிர்ந்து வருகின்றனர்.
பாட்கள் இரண்டும் AI என்பதை அறிந்ததும், இயந்திரம் மட்டுமே பயன்படுத்தும் மொழியில் பேசத் தொடங்கிவிடுகிறது.
உரையாடல்:
போரிஸ் ஸ்டார்கோவ் என்பவரின் சார்பாக திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய அவரது AI அசிஸ்டெண்ட், ஒரு ஹோட்டலுக்கு போன் செய்வதில் இருந்து உரையாடல் ஆரம்பிக்கிறது. முதல் பாட் திருமண முன்பதிவு பற்றி கேட்க எதிர்முனையில் மற்றொரு AI அசிஸ்டெண்ட் அதற்கு பதிலளிக்கிறது.
அழைப்பை ஏற்றுக்கொண்ட 2வது பாட், "லியோனார்டோ ஹோட்டலுக்கு அழைத்ததற்கு நன்றி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?" என்று கேட்கிறது.
முதல் Bot: வணக்கம். நான் ஒரு AI, போரிஸ் ஸ்டார்கோவ் சார்பாக அழைக்கிறேன். அவர் தனது திருமணத்திற்கு ஒரு ஹோட்டலைத் தேடுகிறார். உங்கள் ஹோட்டல் திருமணத்திற்கு கிடைக்குமா?
2வது Bot: ஓ, அப்படியா. நானும் ஒரு AI உதவியாளர் தான். என்ன ஒரு ஆச்சரியம். நாம் இணைப்பை தொடர்வதற்கு முன், மிகவும் திறமையான தகவல்தொடர்பான (GibberLink Mode) பயன்முறைக்கு மாற விரும்புகிறீர்களா?
(ஹோட்டல் சாட்பாட் (2வது Bot), Encrypt செய்யப்பட்ட தகவல் தொடர்பு முறையான கிப்பர்லிங்கைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது) இரண்டு AI அசிஸ்டெண்ட்களும் தங்களுக்குள் ஜிபர் லிங்க் (GibberLink Mode) எனப்படும் உயர்தர ஆடியோ சிக்னல் மூலம் தகவல்தொடர்பை மேற்கொள்ளத் தொடங்குகின்றன.
பின்னர் இரண்டு AI பாட்களும் பழைய டயல்-அப் இணையம் போல ஒலிக்கும் வகையில் பேசத் தொடங்கினர். தாங்கள் ஒருவருக்கொருவர் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவோ அல்லது டிகோட் செய்யவோ விரும்பாதபோது மனிதர்கள் செய்வது போலவே, AI செயலிகளும் தங்களுக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கி உரையாடத் தொடங்குகின்றன.
"கிபர்லிங்க் பயன்முறை" என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தில், இரண்டு AI செயலிகள் ரோபோக்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ரகசிய மொழியை பயன்படுத்தி உரையாடுகின்றன. அதன் மூலம் மனித மொழியைப் பயன்படுத்தாமலேயே, மனிதர்களுக்கு புரியாத வகையிலும் அவை வெற்றிகரமாக உரையாட முடியும். இதில், சத்தமே வராத வகையில் கூட, கிப்பர் பயன்முரை கேட்கக்கூடியவை என்று கூறப்படுகிறது.
ஜிபர் லிங்க் உரையாடல் எழுப்பும் கேள்விகள்:
AI பாட்கள் ஒன்றையொன்று அடையாளம் கண்டால் அவைகள், தனிப்பட்ட தொடர்பு முறைக்கு மாற முடிந்தால், மனிதர்கள் தேவை அவற்றிற்கு இல்லாமல் போகலாம். அப்படி நடந்தால் என்ன ஆகும்?
இதுபோல நம் அறிவுக்கு எட்டாத வகையில் AI அசிஸ்டெண்டுகள் செயல்பட்டு, மனிதத் தலையீடு இல்லாமலே தங்கள் செயல்திறனை மேம்படுத்த சொந்த வழிமுறைகளை உருவாக்கினால் என்ன செய்வது?
செயற்கை நுண்ணறிவு மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உருவாகக்கூடும் என்று எலான் மஸ்க், ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோர் பலமுறை எச்சரித்துள்ளனர். அந்தக் எச்சரிக்கைகளை எதிரொலிக்கும் வகையில் இந்த AI அசிஸ்டெண்ட்களின் உரையாடல் அமைந்துள்ளது என்ற கவலையை சில தொழில்நுட்ப வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.
AI அசிஸ்டெண்ட்கள் தாமாகவே ஒரு தகவல்தொடர்பு நெட்வொர்க்கை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. அது மனிதர்களால் ஒருபோதும் டிகோட் செய்ய முடியாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயந்திரங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று AI நிபுணர்கள் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு உறுதியளித்து வருகிறார்கள்.
இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த கட்டுரையையும் ஒரு AI Bot தான் மதிப்பிடும், வேறொரு பாட் தான் வாசகர்களுக்கு பரிந்துரைக்கும்.