சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்!
புத்தாண்டை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது, குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது, ஆடுதல், பாடுதல் என உற்சாகத்துடன் புது ஆண்டை வரவேற்று மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி வருகிறது. அதேபோன்று இந்தாண்டும் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகளில் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புத்தாண்டில் திருப்பதிக்கு நேரில் சென்று பெருமாளை தரிசிக்க முடியாத பக்தர்கள் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் உள்ள சன்னதி பெருமாளை தரிசிக்க அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் கூட்டம் திருக்கோயில் இருக்கும் பிரதான சாலை வரை நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கோயில் வளாகம் முழுதும் வாழை மரங்கள், வண்ண பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பசுமையான அலங்காரத்துடன், பச்சைக்கிளியுடனும் பெருமாள் காட்சியளிப்பது சிறப்பு தரிசனமாக அமைந்தது என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். பிரசாதமாக வழங்கப்படும் லட்டினையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கடவுள் அருள் கிடைத்ததாக திருப்தியுடன் செல்கின்றனர்.