முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள், காய்கறிகள் விலை உயர்வு!
கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் முகூர்த்த நாளை முன்னிட்டு, பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் வரத்து இல்லாமல் கோயம்பேடு சந்தை நேற்று (ஜன. 21) வெறிச்சோடி காணப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி கிலோ மல்லி ரூ.3,000, ஐஸ் மல்லி ரூ.2300, காட்டு மல்லி ரூ.2,000, முல்லை ரூ.1,500, ஜாதி மல்லி ரூ.1,200, கனகாம்பரம் ரூ.1,000, அரளி பூ ரூ.350, சாமந்தி ரூ.190, சம்பங்கி ரூ.210, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா ரூ.120 என விற்பனை செய்யப்பட்டது.
இது போல காய்கறிகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ கேரட் ரூ.70-க்கும், பீன்ஸ் ரூ.45, ஊட்டி பீட்ரூட் ரூ.70, முள்ளங்கி ரூ.55, வெண்டைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.150, பச்சை மிளகாய் ரூ.45, பட்டாணி ரூ.45, இஞ்சி ரூ.110, பூண்டு ரூ.320, எலுமிச்சை ரூ.75, வண்ண குடை மிளகாய் ரூ.100, மாங்காய் ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.